ஆசிரியை தடுத்தும் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டைபோட்ட பள்ளி மாணவிகள்...!
|நெல்லை பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் மாணவிகள் ஒருவரையொருவர் தலை முடியை பிடித்து சண்டை போட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை மாநகரின் முக்கிய பஸ் நிலையமாக பாளை பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் வழியாக தினந்தோறும் ஏராளமான பஸ்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த பஸ் நிலையத்தில் இருந்து தான் தங்களது ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இந்தநிலையில்,
அரசு உதவி நிதி பெறும் சாரா டக்கர் பள்ளியில் வகுப்பை முடித்துவிட்டு நேற்று மாலை வீடு திரும்பும் வழியில் மாணவிகள் சிலருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. இந்த சண்டையை பள்ளி ஆசிரியை தடுக்க முயற்சித்தும், விடாபிடியாக தலை முடியை பிடித்து மாணவிகள் சண்டையிட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளை வைத்து இன்று காலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று கைகலப்பில் ஈடுபட்ட மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பஸ்சில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏற முயன்ற போது இந்த தகராறு ஏற்பட்டதாக மாணவிகள் கூறியதை அடுத்து அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த பஸ் நிலையத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.