திருச்சி
மணல் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
|மணல் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தா.பேட்டை:
திருச்சி அருகே கல்லணை பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டு பின்னர் லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இதற்காக முசிறியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ள செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து லாரிகளுக்கு ரசீது வழங்கி கல்லணை பகுதி அரசு மணல் குவாரிக்கு சென்று மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. தினசரி குறிப்பிட்ட அளவு லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஒரு லாரிக்கு 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.
தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணல் குறைவாக அள்ளப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்கள் ஆகியும் மணல் அள்ள லாரிகளுக்கு டோக்கன் வழங்கப்படாததால் டிரைவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலேந்திரன், ராஜதுரை மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு விதிமுறைகளின்படி மணல் அள்ள ஏற்பாடு செய்யப்படும். காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து மணல் அள்ள அனுமதிக்கப்படும்போது, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளுக்கு முன்னுரிமை அளித்து மணல் ஏற்ற அனுமதிக்கப்படும். இதற்காக வழங்கப்படும் டோக்கனை கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் லாரிகளில் மணல் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று லாரி டிரைவர்கள் போராட்ட முடிவை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.