திருவாரூர்
ரூ.7 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த சலூன் கடைக்காரர்
|ரூ.7 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த சலூன் கடைக்காரர்
திருத்துறைப்பூண்டி வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.7 ஆயிரத்தை எடுத்து வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த சலூன் கடைக்காரரை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
சலூன் கடைக்காரர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் கிராமத்தில் வசிப்பவர் ராஜசேகரன் (வயது 38). இவர் திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கண்ணா என்ற மனைவியும், அருந்ததி என்ற மகளும் உள்ளனர்.
நேற்று மதியம் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏற்கனவே ஏ.டி.எம். எந்திரத்தில் ஒருவர் பணம் எடுத்த முயன்ற போது பணம் வரவில்லை. இதனால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
வங்கி மேலாளரிடம் ஒப்படைப்பு
ஆனால் அவர் எடுத்த பணம் ரூ.7 ஆயிரம் எந்திரத்தில் 500 ரூபாய் நோட்டுக்களாக இருந்துள்ளது. இதை பார்த்த ராஜசேகரன் அந்த பணத்தை எடுத்து உடனடியாக அருகில் இருந்த வங்கியின் மேலாளர் ஹரிஹரசங்கரிடம் ஒப்படைத்தார்.
உடனடியாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அந்த வாடிக்கையாளர் யார் என கண்டறியப்பட்டது. அதில் அவருடைய வங்கி கணக்கு, தொலைபேசி எண்களை சரி பார்த்து அவரை அழைத்து அந்த பணத்தை கரியாபட்டினத்தை சேர்ந்த ராஜன் என்பவரிடம் வங்கி மேலாளர் ஒப்படைத்தார்.
பாராட்டு
ராஜசேகரனின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் பாராட்டினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜசேகரனின் மனைவி கண்ணா அதே வங்கியில் நகை கடன் ரூ. 65ஆயிரம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தவறுதலாக வங்கியில் இருந்து ரூ. 65ஆயிரம் தனது வங்கி கணக்கிலும் பதிவாகி உள்ளதை பார்த்து உள்ளார். உடனடியாக வங்கிக்கு சென்று தான் பணம் பெற்றுக் கொண்டு சென்று விட்டதாகவும், தவறுதலாக பணம் என் கணக்கில் ஏறி உள்ளதாகவும் கூறியுள்ளார். உடனடியாக வங்கி நிர்வாகம் இந்த பணத்தை அவரது கணக்கிலிருந்து எடுத்துள்ளனர். கணவன்- மனைவி இருவரும் செய்த செயல் அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது.