திண்டுக்கல்
வனத்துறையினரின் அத்துமீறலை கண்டித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
|கொடைக்கானலில் வனத்துறையினரின் அத்துமீறலை கண்டித்து விவசாயிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
கொடைக்கானல் தாலுகா செம்பராங்குளம் வனப்பகுதியை சேர்ந்த வடகவுஞ்சி, பி.எல்.செட், ஜீவா நகர், பெரும்பள்ளம், செம்பராங்குளம், கும்பூர்வயல் உள்பட 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் வனத்துறையினர் அத்துமீறலை கண்டித்து மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி போலீசார் அறிவுறுத்தினர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அனைவரையும் அழைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
வனத்துறையினர் இடையூறு
இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு மதுமதி, வனச்சரகர்கள் சுரேஷ்குமார், குமரேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், ஒன்றியக்குழு தலைவர் சுவேதாராணி கணேசன், வடகவுஞ்சி ஊராட்சி துணைத்தலைவர் சிவபாலன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே குடியிருந்து விவசாயம் செய்து வருவதாகவும் இதற்கு வனத்துறை அலுவலர்கள் இடையூறு செய்கின்றனர். சோலார் மின்வேலியை அகற்றி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், 100 நாள் வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்களை வனத்துறையினர் மிரட்டுவதாகவும் உள்ளிட்ட பல்வேறு புகார்களை கூறினர்.
போலி பட்டா
இதையடுத்து கூட்டத்தில் ஆர்.டி.ஓ. ராஜா பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். மலைப்பகுதிகளில் வில்பட்டி மற்றும் வடகவுஞ்சி ஊராட்சி பகுதிகளில் தனியார்களுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் 16 பேர் அடங்கிய குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கும் பயன்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் தீர்வு கிடைக்கும். பல்வேறு கிராமப் பகுதிகளில் போலி பட்டாக்கள் வழங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வனக்குழு தலைவர்கள் மீது கூறப்படும் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் மாற்றப்படுவார்கள். அத்துடன் வனத்துறை ஊழியர்கள் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள சாலையை பராமரிக்க எந்த இடையூறும் செய்யக்கூடாது. புதிய பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றார்.
இதனையடுத்து கிராம மக்களும், விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.