சென்னை
மதுபாட்டிலால் வாலிபரை சரமாரியாக குத்திய ரவுடி
|மதுபாட்டிலை தராததால் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலை உடைத்து வாலிபரை சரமாரியாக குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் குமார் (வயது 25). பெரம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை சேகரித்து அதனை பழைய பேப்பர் கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தில் பிழைத்து வந்தார். பெரம்பூர் தெற்கு அகரம் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் உள்ள மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கிவிட்டு வெளியே வந்த இவரை வழிமறித்த பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு மணியம்மை நகரைச் சேர்ந்த ரவுடி சேரமான் (வயது 23), மதுபாட்டிலை கொடுக்கும்படி கேட்டார்.
இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு முற்றி கைகலப்பானது. குமார் அருகில் இருந்த கல்லை எடுத்து சேரமான் காதில் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த சேரமான், அருகில் இருந்த மது பாட்டிலை உடைத்து குமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த குமார், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து ரவுடி சேரமானை கைது செய்து விசாரித்து வருகிறார்.
இதேபோல் கொத்தவால்சாவடி சின்னதம்பி தெருவை சேர்ந்தவர் அப்பால் முகமது (36). வீட்டின் கீழே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது ஓட்டலுக்கு ஆட்டோவில் வந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அப்பாஸ் முகமதுவை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி கொத்தவால்சாவடி போலீசார் ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா என்ற பாம்பே சத்யா (30) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.