< Back
தமிழக செய்திகள்
மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடி
சென்னை
தமிழக செய்திகள்

மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடி

தினத்தந்தி
|
12 Sept 2023 12:50 PM IST

குடும்ப செலவுக்கு பணம் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் மனைவி புகார் செய்ததால் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடியால் செங்குன்றம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல ரவுடி

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மச்சவள்ளி ராஜேஷ் (வயது 35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கு 3 மனைவிகள் என தெரிகிறது. இதில் 3-வது மனைவி, குடும்ப செலவுக்கு கூட ராஜேஷ் பணம் கொடுக்க மறுப்பதாக சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜேசை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

தற்கொலை மிரட்டல்

இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ், குடிபோதையில் நேற்று மாலை 6 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜேசை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள், மின்கோபுரத்தில் ஏறி ராஜேசை மீட்டு பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்