நிலவின் தென் துருவத்தில் ரோவர் சுழன்று சுழன்று ஆய்வு - பிளாஸ்மா, நில அதிர்வை கண்டறிந்தது
|நிலவின் தென் துருவத்தில் ரோவர் சுழன்று சுழன்று புதிய ஆய்வுகளை செய்து வருகிறது. பிளாஸ்மா, நிலஅதிர்வை கண்டறிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை அலசி ஆராய 'சந்திரயான்-3' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியதில் இருந்து, ரோவர் எடுத்த அபூர்வமான புகைப்படங்களை எல்லாம் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
எந்த நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்ற காட்சியும் இந்தியர்களை ஆனந்தத்தில் பெருமை கொள்ள செய்தது.
குறிப்பாக நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது.
வழிசெலுத்தல் கேமராவில் (நேவிகேஷன் கேமரா) லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இதுதான் நிலவின் காட்சியென இஸ்ரோ வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயத்தை கவர்ந்து வருகிறது. அத்துடன் உலகமே இஸ்ரோவின் காட்சிகளை உற்று நோக்கி வருகிறது.
இதுபோக நிலவில் ஆக்சிஜன், கந்தகம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன போன்ற அறிவியல் தகவல்களையும் வழங்கி வியப்பளித்து வருகிறது.
முன்னதாக ரோவரை லேண்டர் படம் எடுத்திருந்தது. தற்போது நிலவில் உலாவும் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை படம் எடுத்து அனுப்பி உள்ளது. இது குழந்தை தாயை சுற்றி வருவது போலவும், நிலாவை காண்பித்து குழந்தையை தாய் மகிழ்ச்சியூட்டும் சந்தமாமா போன்ற நிகழ்வு போலவும் உள்ளது.
சந்தமாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக மகிழ்ச்சியாக இருப்பதுபோல் உணர்கிறேன், அம்மா பாசத்துடன் பார்க்கிறாள் என்று பிரக்யான் ரோவர், விக்ரமின் லேண்டரை பற்றி கற்பனையாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து ரோவர் நிலவு நாளின் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் நிலவின் மேற்பரப்பில் சுழன்று சுழன்று ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்.
நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் ஆய்வில் ஈடுபட்டு வரும் ரோவர் பல்வேறு அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதில் உள்ள கருவிகள் அதற்கான ஆய்வு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதாக ரோவர் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து தற்போது பிளாஸ்மா இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளது.
அத்துடன், நிலவில் நில அதிர்வு செயல்பாடுகளை, நிலவில் முதல் மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (தொழில்நுட்பம் சார்ந்த கருவி) - ரோவர் மற்றும் பிற கருவிகள் இயக்கங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.