விழுப்புரம்
விழுப்புரத்தில் போலீஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஆவணங்கள் சேதம்...!
|விழுப்புரத்தில் போலீஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஆவணங்கள் சேதமானது.
விழுப்புரம்
போக்குவரத்து போலீஸ் நிலையம்
விழுப்புரம் நகரில் போக்குவரத்து காவல்துறை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேற்கு போலீஸ் நிலையம், நகர போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் ஆகியவை சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகிற நிலையில் போக்குவரத்து காவல்துறைக்கு மட்டும் சொந்த கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படாததால் தற்காலிக இடங்களில் செயல்பட்டு வந்தன. தற்போது விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள பழைய கட்டிடத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
மேற்கூரை இடிந்து விழுந்தது
இங்குள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் மழைக்காலங்களில் அவ்வப்போது கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் போலீசார் ஒருவித அச்சத்துடனேயே பணியாற்றி வந்தனர். எனவே பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு புதியதாக கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம் பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் மேல்தளம் தண்ணீரில் நனைந்து விரிசல் ஏற்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென அந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர். அதேநேரத்தில் போலீஸ் நிலையத்தில் உள்ள சில ஆவணங்கள் மட்டும் சேதமடைந்தன.
வேறு இடத்திற்கு மாற்றம்
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின்படி, போக்குவரத்து போலீஸ் நிலையம் தற்காலிகமாக நகர போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு செயல்பட தொடங்கியுள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது, போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்கனவே திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ததும் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றனர்.
விழுப்புரத்தில் போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.