திருச்சி
பலத்த காற்றால் வீட்டின் மேற்கூரை சரிந்தது
|பலத்த காற்றின் காரணமாக வீட்டின் மேற்கூரை சரிந்தது.
துறையூரை அடுத்துள்ள கொட்டையூர் கிராமத்தில் வசிப்பவர் பெரியசாமி. விவசாயி. இவரது மனைவி செல்லக்கிளி. இவர்களது 2 மகள்களுக்கு திருமணமாகி வெளியூர் சென்று விட்டனர். பெரியசாமி வயல் பகுதியில் வீடு கட்டி, அங்கு தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது பெரியசாமி வீட்டின் மேற்கூரையானது காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கீழே சரிந்தது.
இதில் வீட்டில் இருந்த பெரியசாமி மற்றும் அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் மேற்கூரை இல்லாததால் அவர்கள் இரவு முழுவதும் மழையில் நனைந்தவாறு இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை வருவாய்த் துறையினருக்கு சமர்ப்பித்துள்ளார்.
வீடு இழந்த நிலையில் பெரியசாமி, செல்லக்கிளி ஆகியோர் தற்காலிகமாக பக்கத்து வீட்டில் தங்கி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை 45 மில்லி மீட்டர் ஆக பதிவாகியுள்ளது.