அரியலூர்
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
|காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த்(வயது 24). இவர் அதே பகுதியில் உள்ள தெற்குத்தெருவை சேர்ந்த சக்கரவர்த்தியின் மகள் விந்தியாவை(20) கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். விந்தியா நர்சிங் மாணவி ஆவார். இந்நிலையில் அவரது பெற்றோரிடம் பிரசாந்த் திருமணம் செய்ய பெண் கேட்டதாகவும், அவர்கள் பெண் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கும்பகோணம் அருகே வலங்கைமானில் உள்ள மாரியம்மன் கோவிலில் பிரசாந்தும், விந்தியாவும் திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதில் விந்தியாவின் பெற்றோர் அங்கு வர மறுத்துவிட்டனர். பிரசாந்தின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து போலீசார் அறிவுரைகள் கூறி காதல் திருமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.