வெயில் தாக்கத்தால் திருட வந்த வீட்டில் குளித்து இளைப்பாறிய கொள்ளையன்
|இட்டமொழி பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் அம்மன் கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நீலாபுஷ்பா (வயது 60). வீட்டில் தனியாக வசித்துவரும் இவர், நாகர்கோவில் வடசேரி, திங்கள் சந்தைக்கு சென்று பனங்கிழங்கு வியாபாரம் செய்து வருவது வழக்கம். அதன்படி நீலாபுஷ்பா கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு நாகர்கோவிலுக்கு வியாபாரத்துக்கு சென்றுவிட்டார்.
வியாபாரத்தை முடித்துவிட்டு மாலையில் அவர் தனது ஊருக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2 லட்சம், 3¼ பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து நீலாபுஷ்பா தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, நீலாபுஷ்பா வீட்டில் பனங்கிழங்கு விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்த பண்டாரபுரத்தை சேர்ந்த முத்துக்குட்டி மகன் ஜெயக்குமார் (46) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதாவது கடந்த 23-ந் தேதி நீலாபுஷ்பா வீட்டிற்கு பனங்கிழங்கு வாங்குவதற்காக ஜெயக்குமார் வந்தார். பின்னர் அவர் பனங்கிழங்கை வாங்கிவிட்டு புறப்பட்டார். சிறிது நேரத்தில் வியாபாரத்திற்காக நீலாபுஷ்பா வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஜெயக்குமார் மீண்டும் நீலாபுஷ்பா வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்தார். பீரோவில் இருந்த ரூ.2 லட்சம், 3¼ பவுன் நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. மேலும் அன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் திருட வந்த வீட்டில் ஒரு வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து குளித்துவிட்டு ஜெயக்குமார் இளைப்பாறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் இட்டமொழி பகுதியில் பதுங்கி இருந்த ஜெயக்குமாரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்த நகை, பணத்தை மீட்ட போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.