தேனி
கொட்டித்தீர்த்த மழையால் குளமாக மாறிய சாலை
|தேனியில், கொட்டித்தீர்த்த மழையால் சாலை குளமாக மாறியது.
கொட்டித்தீர்த்த மழை
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தேனியில் நேற்று பகலில் மழை இல்லை. மாலை 5 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இது கனமழையாக உருவெடுத்தது. 1 மணி நேரத்துக்கும் மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் ஆறாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாரஸ்ட்ரோடு, சிவாஜி நகர், என்.ஆர்.டி. நகர், காந்திஜி ரோடு போன்ற பகுதிகளில் பெய்த மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து மதுரை சாலையில் பங்களாமேடு நோக்கி ஓடியது. ஆனால், அங்கு ராஜவாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது.
குளமாக மாறிய சாலை
பங்களாமேடு திட்டச்சாலை சந்திப்பில் இருந்து அரண்மனைப்புதூர் விலக்கு வரை சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியது. அதில் சாக்கடை கழிவுநீரும் கலந்தது. இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தன.
தேனியின் முக்கிய சாலை என்பதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 7 மணியளவில் மதுரை சாலை, பாரஸ்ட் ரோடு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதேபோல் சாலையோரம் உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
சாலையில் தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தவோ, மீட்பு பணிக்கோ அதிகாரிகள் யாரும் வரவில்லை. இது பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.