தமிழகத்தில் சாலை வரி 5 சதவீதம் வரை உயருகிறது
|தமிழகத்தில் வாகனங்களுக்கான சாலை வரி 5 சதவீதம் வரை உயருகிறது. இதனால் கார், மோட்டார் சைக்கிள்களின் விலை உயரும் என கூறப்படுகிறது.
சென்னை,
மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கான சாலை வரி 2008-ம் ஆண்டும், கார்களுக்கான சாலை வரி 2010-ம் ஆண்டும் திருத்தப்பட்டன. தற்போது, புதிய மோட்டார்சைக்கிளுக்கான விலையில் 8 சதவீதம் வரியாக விதிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக சாலை வரி உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில் சாலை வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து உள்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த கூட்டத்தில், மோட்டார்சைக்கிளுக்கு குறைந்தபட்சம் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரையும், கார்களுக்கு 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையும் சாலை வரியை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, சாலை வரி உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மோட்டார்சைக்கிளுக்கு ஒரே மாதிரியாக 8 சதவீத வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் ரூ.1 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவீத வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சம் 20 சதவீதம் வரி
அதேபோன்று தற்போது ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10 சதவீத சாலை வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.
புதிய திட்டப்படி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
ரூ.20 லட்சத்துக்கு மேல் விலையுள்ள கார்களுக்கு வாகனத்தின் விலையில் 20 சதவீதம் வரியாக விதிக்கப்படுகிறது.
ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்
இதன்மூலம் போக்குவரத்துத்துறைக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
'விலை உயர்ந்த வாகனங்களை வாங்கக்கூடியவர்களுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையின் அடிப்படையில் சாலை வரி திருத்தம் செய்யப்படுகிறது. அதாவது ரூ.11 லட்சம் விலையுள்ள காருக்கும், ரூ.1 கோடி மதிப்பிலான காருக்கும் ஒரே சதவீதத்தில் வரி விதிப்பது நியாயமற்றது என்பதை கருத்தில் கொண்டு இந்த வரி விகிதம் திட்டமிடப்பட்டுள்ளது' என போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாகனங்களின் விலை உயரும்
'சாலை வரி உயர்வு அமலுக்கு வரும்போது 150 சி.சி. திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் வாங்குபவர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை (ஜி.எஸ்.டி. உள்பட) கூடுதல் செலவாகும்.
100 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலும், 125 சி.சி. திறன்கொண்ட மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.95 ஆயிரம் வரையிலும் இருக்கும். ரூ.10 லட்சத்துக்கும் குறைவான கார்கள் அதிகளவில் விற்பனையாகின்றன.
எனவே, 2 முதல் 3 சதவீதம் வரையிலான வரி உயர்வு கூட கார்களின் விலையை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அதிகரிக்கக்கூடும்' என மோட்டார் வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உயர்த்தப்பட உள்ள இந்த சாலை வரி, வாழ்நாள் முழுவதும் அல்லது 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.