நீலகிரி
சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்
|குன்னூர் அருகே விபத்து நடந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குன்னூர் அருகே விபத்து நடந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து 60 பேர் தனியார் பஸ் மூலம் கேரளா சென்று விட்டு, கடந்த 30-ந் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டனர். குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் சென்ற போது, பஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள்.
இதுகுறித்து பஸ் உரிமையாளர், 2 டிரைவர்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் என 4 பேர் மீது குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மலைப்பாதை என்பதால், பிற மாவட்டங்கள் மற்றும் வெளியிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சாலை விரிவாக்கம்
இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் தடுப்புச்சுவர் உடைந்து கிடந்தது. இதனால் அப்பகுதியில் மீண்டும் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதையடுத்து மரப்பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த பகுதி குறுகலாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, குன்னூ் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளான பகுதியில் உடனடியாக சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். சாலையின் இருபுறமும் உள்ள புதர்களை வெட்டி அகற்ற வேண்டும். இதேபோல் பா்லியார் பகுதியிலும் சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கூட்டு ஆய்வு
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, விபத்து நடந்த இடத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காவல்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மூலம் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் விபத்து நடந்த பகுதியில் கட்டிட பணிகள் மேற்கொள்வது குறித்து அறிக்கை தயார் செய்யப்படும். அப்பகுதியில் சாலையோரம் உள்ள நிலம் யாருடையது என வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் பின்னர் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றனர்.