< Back
மாநில செய்திகள்
அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சாலை
கரூர்
மாநில செய்திகள்

அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சாலை

தினத்தந்தி
|
19 Jun 2023 11:39 PM IST

தோகைமலை அருகே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சாலையை புதிய தார்சாலையாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி பொன்னம்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குளித்தலை, மணப்பாறை, தோகைமலை செல்ல ஏதுவாக சின்னரெட்டிபட்டி-பொன்னம்பட்டி இடையே தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை பாதிரிபட்டி, பொன்னம்பட்டி நடுதெரு, பொன்னம்பட்டி காலனி, தமிழ்நாடு காகித ஆலை, பில்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை வழியாக தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் சென்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த தார்சாலை தற்போது சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

ஆம்புலன்சுகள் கூட...

மேலும் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்களை அழைத்துச்செல்ல வரும் ஆம்புலன்ஸ்கள் கூட விரைவாக வந்துசேர முடியாத சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக உயிரிழப்பு சம்பவங்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நிற்கிறது. இதனால் வாகனங்களை பழுது நீக்கம் செய்வதற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு செல்வதற்கு என பொதுமக்கள் பல்வேறு வகையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இதுகுறித்து பொருந்தலூர் ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சின்னரெட்டிபட்டி-பொன்னம்பட்டி தார்சாலையை புதிய தார்சாலையாக மாற்றித்தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்