திருவள்ளூர்
பூந்தமல்லிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலை - விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
|பூந்தமல்லிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை விரைந்து அதிகாரிகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் செந்தூர்புரம் மெயின் ரோடு அமைந்துள்ளது. மவுண்ட்-பூந்தமல்லி சாலையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை பயன்படுத்தி மாங்காடு, அய்யப்பன் தாங்கல், பரணிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது.
பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இச்சாலை கோடை காலங்களில் புழுதி பறக்கும் சாலையாகவும், மழைக்காலங்களில் பள்ளமேடு நிறைந்த சாலையாகவும் காட்சியளிக்கிறது.
இதையடுத்து காட்டுப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சீலாசரவணன், ஒன்றிய கவுன்சிலர் கவுதமன் ஆகியோர் இந்த சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, ெடுஞ்சாலைதுறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது நெடுஞ்சாலைதுறை வசம் வந்த நிலையில் சுமார் ரூ.4 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இச்சாலை பணிகள் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சாலை வழியாக செல்ல அச்சப்பட்டு பொதுமக்கள் சில கிலோ மீட்டர் தூரம் மாங்காடு பகுதியாக சுற்றிக்கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த சாலையை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.