இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை? - பெண் ஊழியரின் காதை கடித்த அம்மா உணவக மேற்பார்வையாளர்...!
|சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பெண் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
போரூர்,
சென்னை விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மனைவி தாமரைச்செல்வி. இவர் சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேற்பார்வையாளர் (சூப்பர்வைசர்) பெண் ராதிகா, இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை, ஒழுங்காக வேலையை பார் என்று தாமரைச்செல்வியை கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
பின்னர் திடீரென இருவரும் கட்டி புரண்டு ஒருவரையொருவர் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த மோதலில் தாமரைச்செல்வியின் காதை ராதிகா கடித்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த தாமரைச்செல்விக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசில் தாமரைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.