செங்கல்பட்டு
அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சோழிங்கநல்லூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதம்
|அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சோழிங்கநல்லூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
பொதுமக்கள் உண்ணாவிரதம்
சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் பொதுநல சங்கம் சார்பில் குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி, சோழிங்கநல்லூரில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. சங்கத்தின் தலைவர் டி.ராமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வி.பார்த்திபன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் குடியிருப்பு சங்கத்தின் நிர்வாகிகள் உள்பட சோழிங்கநல்லூர் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதம் குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பார்த்திபன் கூறியதாவது:-
அடிப்படை வசதிகள்
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சோழிங்கநல்லூர் இணைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை குடிதண்ணீர், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றளவும் நிறைவேற்றி தரப்படவில்லை. ஒரு சில இடங்களில் வெறும் குழாய்கள் மட்டுமே பதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இணைப்புகள் தரப்படவில்லை. அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு, எங்கள் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம். இதுவரை எதுவும் நடந்தபாடில்லை.
கழிவுநீர் எடுப்பதற்கும், குடிநீருக்கும் மாதந்தோறும் ஒரு குடும்பம் ரூ.4 ஆயிரம் செலவு செய்யவேண்டியதுள்ளது. அரசு எத்தனையோ திட்டங்களுக்கு பல கோடிக்கணக்கில் செலவழிக்கிறது. ஆனால் பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேறியபாடில்லை.
போர்க்கால அடிப்படையில்...
அரசு முயற்சித்தால் போர்க்கால அடிப்படையில் இந்த திட்டங்களை செயல்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றிட முடியும். இதை வலியுறுத்தியே உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை தொடங்கி மாலை முடிவடைந்தது.