விருதுநகர்
கடைகளின் வாடகையை குறைக்க வேண்டும்
|சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட உள்ள புதிய வணிக வளாகத்தில் கடைகளின் வாடகையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட உள்ள புதிய வணிக வளாகத்தில் கடைகளின் வாடகையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.
புதிய வணிக வளாகம்
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் அமைத்து அதில் 10-அடிக்கு 10 என்ற அளவில் 103 கடைகளை கட்டி வாடகை விட முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம் கடைக்கான வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகை குறித்து முடிவு செய்ய சிவகாசி, திருத்தங்கல் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தை நேற்று காலை நடத்தியது.
இந்த கூட்டத்தில் மேயர் சங்கீதா இன்பம், துணைமேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் சங்கரன், மண்டல தலைவர்கள் குருசாமி, சேவுகன், கவுன்சிலர்கள், வர்த்தக சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் என 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வாடகையை குறைக்க வேண்டும்
கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான வியாபாரிகள், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகவளாகம் கட்டி வாடகைக்கு விடுவதை வரவேற்பதாகவும், வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகையை குறைத்து அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சிலர் 10 அடிக்கு 10 என்ற அளவு மிகவும் சிறியதாக இருப்பதாகவும், வர்த்தகம் செய்ய இந்த அளவு கடைகள் போதுமானதாக இருக்காது என கூறினர். இதற்கு பதில் அளித்த கமிஷனர் சங்கரன் கூடுதல் இடம் தேவைப்படும் வியாபாரிகள் அதற்கான அட்வான்ஸ் தொகையை செலுத்தி கூடுதல் கடைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ரமேஷ், அபுபக்கர் சித்திக், சரவணன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.