கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு குறைந்தது
|கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை 2-வது முறையாக நேற்றும் முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 41 ஆயிரத்து 099 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த நீர் (அதாவது 41,099 கனஅடி நீரும்) அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
கே.ஆர்.எஸ். அணையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 11 ஆயிரத்து 852 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு நேற்று அதிகரிக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 53 ஆயிரத்து 099 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது. குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.