< Back
மாநில செய்திகள்
கோவில் ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

கோவில் ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் கோபுரத்தை சுத்தம் செய்ய முயன்றபோது தவறி விழுந்து பலியான ஊழியரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலம்

கொளஞ்சியப்பர் கோவில்

விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ்(வயது 51) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் சன்னதியில் விமான கோபுரத்தின் தரைப்பகுதியில் இருந்த தண்ணீரை சுத்தம் செய்வதற்காக தென்புறத்தில் உள்ள சுவர் வழியாக ஏறியபோது தவறி விழுந்து இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் ராமதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்தநிலையில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து ராமதாசின் உடல் அவரது வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள் ராமதாசின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களின் கோரிக்கைகள் அரசு விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதை ஏற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு ராமதாசின் உடலை வாங்கி சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இறந்து போன ராமதாசுக்கு அலமேலு (45) என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்