< Back
மாநில செய்திகள்
தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
4 Sept 2023 11:29 PM IST

ஜெயங்கொண்டம் அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

தூக்கில் தொங்கினார்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமம் கரைமேடு தெரு மெயின் ரோட்டு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். கொத்தனாரான இவருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள இடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு மகள் நதியாவுக்கும்(வயது 30) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்தீஷ்(6) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வேல்முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதிக அளவில் மது அருந்தி வந்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

வேல்முருகன் உயிரிழந்ததையடுத்து, நதியா கூலி வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வந்தார். இந்நிலையில் நதியா தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

மேலும் இரவு 2 நபர்கள் தனது தாயுடன் பேசியதாக நித்தீஷ் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அந்த 2 நபர்களிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உள்ள நதியாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஜெயங்கொண்டம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நதியாவின் உறவினர்கள் கூறுகையில், நதியாவின் இறப்பை கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர். அப்போது போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அதுவரை உங்களிடமே நதியாவின் உடல் இருக்கட்டும் என கூறி உடலை வாங்க மறுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்