மதுரை
அதிகாரிகளின் அலட்சியமே ரெயில் விபத்துக்கு காரணம்-வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
|அதிகாரிகளின் அலட்சியமே ரெயில் விபத்துக்கு காரணம் என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டினார்.
மதுரை ரெயில் விபத்து குறித்து வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடந்த ரெயில் விபத்தில் 9 பேர் இறந்துள்ளனர்.8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக ரெயில்வே துறையும், மாநில அரசும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தீப்பற்றி எரியக்கூடிய எந்த பொருளையும் ரெயிலில் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் கியாஸ் சிலிண்டர்களோடு கடந்த 10 நாட்களாக ஒரு பெட்டி பயணிகளுடன் தென்னிந்தியா முழுவதும் பயணித்துள்ளது. இந்த பெட்டி எந்த ரெயில் நிலையத்திலும் ஆய்வு செய்யப்படவில்லை. இந்த விபத்து பலருக்கும் வேதனையை தந்துள்ளது. இதே விபத்து ரெயில் பயணத்தின் போது நடந்திருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் நடந்திருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ரெயில்வே அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணமாகும். ரெயில் பாதுகாப்பு பணியில் போதிய போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்படுவதில்லை. சுமார் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பெண்களுக்கான பெட்டியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் பயணிக்கும் பெட்டிகளை சோதனையிடுவது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. தீயணைப்பு கருவிகளும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் மட்டும் உள்ளது. ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பு விவகாரத்தில் ெதாடர்ந்து அலட்சியப்போக்குடன் நடந்து வருகிறது. ரெயில் நிலையங்களில் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்த அனுமதியில்லை. மோட்டார் சைக்கிள்களை ரெயில்களில் அனுப்பும் போது பெட்ரோல் முழுவதும் எடுக்கப்படுகிறது. பிளாட்பாரம் டிக்கெட்டில் காட்டும் சோதனை ஆர்வத்தை இது போன்ற விவகாரங்களில் செய்வதற்கு ஏன் மறுக்கின்றனர் என்பது தெரியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.