< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தி, பயிற்சி கொடுத்ததே வெற்றிக்கு காரணம்; கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தி, பயிற்சி கொடுத்ததே வெற்றிக்கு காரணம்; கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேட்டி

தினத்தந்தி
|
20 Jun 2022 9:41 PM GMT

மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தி, பயிற்சி கொடுத்ததே வெற்றிக்கு காரணம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூ

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 8-வது இடத்தை பெரம்பலூர் மாவட்டம் பெற்றிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. தற்போது இந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-மாநில அளவில் முதலிடம் பெறும் அளவிற்கு உழைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், நன்கு படித்து தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளை எவ்வாறு நடத்த வேண்டும், மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவுரையின் அடிப்படையிலும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவ்வப்போது அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையிலும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவ்வப்போது எங்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் ஆசிரியர்கள் முறையாக பின்பற்றினார்கள். வாரந்தோறும் மாணவ-மாணவிகளுக்கு எழுத்து தேர்வு நடத்தி, அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்ததே இந்த வெற்றிக்கு காரணம். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்