அரியலூர்
சிறுமியை பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|சிறுமியை பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தா.பொட்டக்கொல்லை வடக்கு தெருவை சேர்ந்த மதியழகனின் மகன் நாவரசு(வயது 20). இவர், 18 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் நாவரசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாவரசு வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும், மேலும் மாணவியின் குடும்பத்தினரின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அதை ஏற்று கலெக்டர் ரமண சரஸ்வதி, குண்டர் தடுப்பு சட்டத்தில் நாவரசுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நாவரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.