தூத்துக்குடி மக்களுக்கு மழை நிவாரணப் பொருட்கள் வழங்கிய ராம்கோ சிமெண்ட் நிறுவனம்
|பிரையன்ட் நகர் மற்றும் சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு 2,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சென்னை:
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் சமீபத்தில் பெருமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோர பகுதிகளில் உள்ள ஊர்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்தனர். மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.
அவ்வகையில், தூத்துக்குடியில் மழை வெள்ளம் சூழ்ந்த பிரையன்ட் நகர் மற்றும் சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு, ராம்கோ சிமெண்ட் நிறுவனம் சார்பில் 2,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
மேலும், படூர் தாலுகா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியது. இந்த நிவாரணப் பொருட்கள், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனிடம் ஒப்படைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டன.
தனது தொகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் நன்றி தெரிவித்தார்.