பெரம்பலூர்
வெப்பத்தை தணித்த மழை
|பெரம்பலூரில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு நேற்று அதிகாலை வரை பெய்தது. பின்னர் காலை நேரத்தில் சிறிது நேரம் நின்ற மழை காலை 9 மணியளவில் மீண்டும் பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மழை பெய்தபோது பலர் குடை பிடித்தபடியும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மழை கோா்ட் அணிந்தும் சென்றனர். அதனை தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்தது. மழையினால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நேற்று பெய்த மழையினால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
செட்டிகுளம்-30, பாடாலூர்-5, அகரம்சீகூர்-64, லெப்பைக்குடிகாடு-50, புதுவேட்டக்குடி-8, பெரம்பலூர்-40, எறையூர்-24, கிருஷ்ணாபுரம்-2, தழுதாழை-6, வி.களத்தூர்-4, வேப்பந்தட்டை-26 ஆகும்.