கள்ளக்குறிச்சி
ரெயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
|உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மயானத்துக்கு செல்லும் பாதையின் குறுக்கே சென்னை-கன்னியாகுமரி இடையிலான ரெயில் பாதை உள்ளது. சென்னையில் இருந்து விருத்தாசலம் வழியாக செல்லக்கூடிய அனைத்து ெரயில்களும் இந்த பாதை வழியாகத்தான் சென்று வருகிறது. இதனால் இந்த இடத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்காக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து இதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு வருடம் ஆகியும் இதுவரை இந்த சுரங்கப்பாதை வேலைகள் முடியவில்லை. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லவும், சுற்றியுள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்களை பராமரிக்க செல்வதற்கும் மாற்று பாதை இல்லாதததால் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.