திருவாரூர்
ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டது
|நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டதால் சாலையில் வானங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.
நீடாமங்கலம்:
ரெயில்வே கேட் மூடப்பட்டது
நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு மன்னார்குடியில் இருந்து திருச்சிக்கு பராமரிப்பு பணிக்கு செல்ல ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 6.05 மணிக்கு வந்தது. இதனால் நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூட்டப்பட்டது. இந்த ரெயில் நீடாமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில், மயிலாடுதுறையில் இருந்து மன்னார்குடி செல்லும் பயணிகள் ரெயில், திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் ெரயில் ஆகிய ெரயில்கள் சென்ற பின்னர், இரவு 7.18 மணிக்கு பராமரிப்பு பணிக்காக திருச்சி செல்லும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ெரயில் நீடாமங்கலத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
அதன் பின்னர் தான் ெரயில்வே கேட் திறக்கப்பட்டது. 1 மணிநேரத்திற்கும் மேலாக ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால் நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இந்தநிலையை போக்கிட நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். மேலும் தஞ்சை முதல் நாகை வரையிலான இருவழிச் சாலைத் திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என நீடாமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.