திருச்சி
ஆயுதங்களுடன் வீதியில் ரகளை செய்த ரவுடிகள்
|ஆயுதங்களுடன் வீதியில் ரவுடிகள் ரகளை செய்தனர்.
திருச்சி காஜாபேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரகனேரி பெரியார்நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அங்கு ஏற்பட்ட தகராறின்போது அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கியதாக தெரிகிறது.
இதனால் நேற்று இரவு 9.15 மணி அளவில் காஜாபேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தனது நண்பர்கள் 5 பேருடன் பெரியார் நகருக்கு வந்துள்ளார். அவர்கள் வீச்சரிவாள், பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அங்கு சாலைப்பணிகளுக்காக போடப்பட்டு இருந்த கற்களை எடுத்து அங்கிருந்த கட்டிடங்களின் மீது எறிந்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு கூடியதால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொதுமக்களிடம், ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள் யார்? எதற்காக வந்தனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் இரவு ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.