செங்கல்பட்டு
ரூ.15 லட்சம் காரை திருடி ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற ரவுடி; மனைவியுடன் நூதன முறையில் கைவரிசை
|ரூ.15 லட்சம் காரை திருடி ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற ரவுடி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கார் மோதியது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராஜலிங்கம் (வயது 33). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி நிறுவனம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ராஜலிங்கம் தனக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்பிலான காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
கேளம்பாக்கம் பகுதியில் செல்லும்போது அந்த வழியாக சென்ற மொபட் மீது ராஜலிங்கத்தின் கார் மோதியது. அந்த மொபட்டில் ஒரு ஆண் மற்றும் பெண் வந்தனர். விபத்தில் மொபட்டில் இருந்து அந்த பெண் தவறி சாலையில் விழுந்தார். இதில் அவரது கையில் இருந்து ரத்தம் வழிந்தது. விபத்துக்குள்ளான மொபட்டை ஓட்டி வந்த ஆண் ராஜலிங்கத்துடன் தகராறில் ஈடுபட்டார்.
கார் திருட்டு
அப்போது அந்த வழியாக புழல் பகுதியை சேர்ந்த ரவுடி முரளி (31), தனது 2-வது மனைவி சங்கீதாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தார். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை பார்த்த முரளி திடீரென ராஜலிங்கத்தின் கன்னத்தில் தாக்கி விட்டு கார் சாவியை பறித்து கொண்டார்.
காரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறேன். காயம்பட்டுள்ள பெண்ணுக்கு முதலில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய் என்று கூறி பெண்ணுடன் வந்தவரின் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அனுப்பினார். அதன் பிறகு ரவுடி முரளி ராஜலிங்கத்தின் காரை திருடிகொண்டு செல்ல, அவரது மனைவி சங்கீதா தாங்கள் வந்த இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றார்.
ராஜலிங்கம் காயம்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அவருடைய காரை காணவில்லை. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ராஜலிங்கம் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் காரை ரவுடி முரளி நூதன முறையில் திருடி சென்றது தெரியவந்தது.
தீவிர விசாரணை
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில் கேளம்பாக்கம் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் கொண்ட 2 தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
கேளம்பாக்கம், மாமல்லபுரம், மேலைகோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து அதில் பதிவான காட்சியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முரளி ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. வாகனத்தில் இருந்த பதிவு எண் சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஒருவருடைய வாகன எண் என்பதும் தெரியவந்தது.
முரளி வசித்து வரும் புழல் அருகில் உள்ள சண்முகாபுரம் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் முரளி தன்னிடம் இருந்த இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய மதுரை சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து தனிப்படையினரும் மதுரை விரைந்தனர். அப்போது முரளி மனைவியுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் சென்னை விரைந்தனர்.
கைது
முட்டுகாடு பகுதியில் பதுங்கியிருந்த இடத்திற்கு தனிப்படையினர் சென்றபோது அவர்களிடம் சிக்காமல் தப்பித்து ஓடும்போது ரவுடி முரளி கீழே விழுந்ததில் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸ்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். ரூ.15 லட்சம் மதிப்பிலான காரை வக்கீல் ஒருவருக்கு ரூ.23 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது.
அவரிடம் சென்று காரை கேட்ட போது செல்ப் டிரைவ் வாடகைக்கு விடும் இடத்தில் ரூ.1 லட்சத்திற்கு லீசுக்கு விட்டது தெரியவந்தது. அவர்கள் வேறு ஒருவருக்கு ரூ. 2 லட்சத்திற்கு கொடுத்தது தெரியவந்துள்ளது.
ஒரு வழியாக திருடப்பட்ட காரை தனிப்படையினர் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். முரளி மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, பீர்க்கண்காரணை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தூத்துக்குடியில் உள்ள ஒருவரின் வாகன பதிவு எண்ணை திருடப்பட்ட காரில் பொருத்தி திருடிய காரை பணம் கொடுத்து வாங்கியதுபோல் உல்லாசமாக சுற்றி திரிந்துள்ளனர்.
போலீசார் முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதாவை கைது செய்தனர்.