திருநெல்வேலி
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்கள்; மேயர் பேச்சுவார்த்தை
|நெல்லை டவுனில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். அவர்களிடம் மேயர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அவ்வப்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது, குடிநீர் வீணாக சாலைகளில் செல்வது உள்ளிட்ட புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் உள்ள டவுன் முகமதுஅலி தெரு, பகவத் சிங் தெரு, ஜெயபிரகாஷ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வரவில்லை, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் திடீர் சாலைமறியலுக்கு முயன்றனர். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மேயர் பி.எம்.சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மேயர் சரவணன், அதிகாரிகளுடன் அந்த பகுதியில் ஆய்வு செய்தார். குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.