கரூர்
செங்கல் சூளை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
|முத்தனூர் குடியிருப்பு பகுதியில் செங்கல் சூளை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
செங்கல் சூளை
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல் இங்கு அரசு ஊராட்சி ஒன்றியஆரம்ப பள்ளியும், தனியார் மெட்ரி குலேஷன்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் சுமார் 10 ஆயிரத்திக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தனூரில் குடியிருப்பு வீடுகளுக்கு அருகிலேயே செங்கல் தயாரிப்பதற்காக மண்களை கொட்டி செங்கல் அறுத்து அங்கேயே செங்கல் சூளை வைத்து செங்கல்லை வேகவைத்து செங்கல் தயாரிப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்நிலையில் குடியிருப்பு பகுதி அருகே செங்கல் தயாரிக்கும் வேலை நடைபெற்றால் லாரிகளில் இருந்து கொண்டுவரும் மண்களை செங்கல் தயாரிக்க உள்ள இடத்தில் கொட்டும் போது ஏராளமான மண் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிகளுக்குள் விழும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள்.அதேபோல் செங்கல் வேக வைப்பதற்கு கரி தூள்கள் மற்றும் பல்வேறு பொருட்களும் மூலம் எரிக்கும் போது கரி தூள்கள் மற்றும் சாம்பல்கள் காற்றில் பறந்து வீடுகளுகள் மற்றும் பள்ளிகளுக்குள் விழுந்து பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இப்பகுதியில் செங்கல் சூளை அமைக்க கூடாது என்றும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் செங்கல் சூளையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் முத்தனூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று புகழூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தில் இருந்த தலைமை இடத்து துணை தாசில்தார் கிருஷ்ணவேணியிடம் புகார் மனுவை கொடுத்தனர்.
புகார் மனு
மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமை இடத்து துணைத்தாசில்தார் கிருஷ்ணவேணி, தாசில்தார் மோகன்ராஜிடன் புகார் மனுவை கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதேபோல் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வள்ளிமுத்துவிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.முத்தனூர் பகுதியில் செங்கல் சூளை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.