< Back
மாநில செய்திகள்
பாலப்பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பாலப்பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

தினத்தந்தி
|
20 Sept 2023 12:15 AM IST

மருங்கூர் அருகே மாற்றுப்பாதை அமைத்து தர ேகட்டு பாலப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதுபோல் ஆரல்வாய்மொழியில் கனரக வாகனங்களை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அஞ்சுகிராமம்,

மருங்கூர் அருகே மாற்றுப்பாதை அமைத்து தர ேகட்டு பாலப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதுபோல் ஆரல்வாய்மொழியில் கனரக வாகனங்களை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலப்பணி

மருங்கூர் அருகே உள்ள ராஜாவூர், கோழிக்கோட்டு பொத்தை வழியாக தோவாளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் ராஜாவூர் பகுதியில் கால்வாயின் குறுக்கே நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதையடுத்து இந்த வழியாக பொதுமக்கள் சென்று வர போதிய அளவிலான மாற்றுப்பாதை அமைத்து கொடுக்கவில்லை எனவும், தற்போது அமைத்துள்ள மாற்றுப்பாதை சிறிய அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.

இந்தநிலையில் நேற்று பாலப்பணியை செய்ய தொழிலாளர்கள் வந்தனர். அப்போது ராஜாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று மாற்றுப்பாதை அமைத்து தர கேட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், துணைத் தலைவி பாலரோகிணி, செயல் அலுவலர் ருக்மணி மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேசினார்.

அப்போது பேரூராட்சி மூலம் உரிய அளவீடு செய்து குடிநீர் குழாய், மின்கம்பங்கள் போன்றவை பாதிக்காத வகையில் மாற்றுப்பாதை அமைக்க ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக பேரூராட்சியில் அவசரக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

ஆர்ப்பாட்டம்

காவல்கிணறு பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு 4 வழிசாலை வழியாக தினமும் நூற்றுக்கனக்கான கனரக வாகனங்கள் அதிக பாரங்களுடன் செல்கின்றன. 4 வழிசாலையில் திருப்பதிசாரம் பகுதியில் சுங்கசாவடி உள்ளது. இங்கு கட்டணம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் ஏராளமான கனரக வாகனங்கள் 4 வழிசாலையில் இருந்து பிரிந்து ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் அருகே உள்ள மங்கம்மாள் சாலை வழியாக மெயின்ரோட்டுக்கு செல்கின்றன. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணி முன்னிலை வகித்தார்.

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணைத்தலைவர் சிலுவைதாசன், பேரூராட்சி துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ஜெனட் சதீஷ்குமார், பாலமுருகன், நவமணி, ஏசுமணி, சுடலையாண்டி, ஜோசப் ரத்னராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

---

மேலும் செய்திகள்