பெரம்பலூர்
சட்டங்கள் குறித்து பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்
|சட்டங்கள் குறித்து பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் கூறினார்.
விழிப்புணர்வு முகாம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் 40 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
முகாமில் நீதிபதி பல்கீஸ் பேசியதாவது;-
நாட்டு மக்கள் அனைவரும் சட்டம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உரிமைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சட்டம் குறித்து ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்டம் குறித்து குறைந்தபட்ச விவரமாவது தெரிந்திருக்க வேண்டும். எந்தவித குற்ற நடவடிக்கைகள் செய்தாலும் தண்டனை கிடைக்கும்.
அவசியம் தெரிந்திருக்க வேண்டும்
இனிவரும் காலங்களில் பொதுமக்கள் எனக்கு சட்டம் தெரியாது. ஆகவே இவ்வாறு செய்து விட்டேன் என்று சொல்ல இயலாது. காலத்திற்கு ஏற்றாற்போலும், சூழ்நிலைக்கு ஏற்றாற்போலும் சட்டங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே பொதுமக்கள் சட்டங்கள் குறித்து கண்டிப்பாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி சட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை அனைத்து தரப்பு மக்களும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி
கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேசுகையில், சாமானிய மக்களுக்கு சட்டம் குறித்த புரிதல் குறைவாக இருக்கிறது. எனவே, அனைத்து தரப்பினருக்கும் சட்டத்தின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், என்றார்.
மேலும் முகாமில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பற்றிய கண்காட்சியும் நடைபெற்றது. இதில் அரசு வக்கீல்கள், அனைத்து துறைகளின் உயர் அலுவலர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான அண்ணாமலை செய்திருந்தார்.