திருச்சி
மீன்கள் விலை குறையாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
|மீன் பிடி தடைக்காலம் முடிந்தும் மீன்கள் வரத்து குறைந்ததால் மீன்கள் விலை குறையவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மீன் பிடி தடைக்காலம் முடிந்தும் மீன்கள் வரத்து குறைந்ததால் மீன்கள் விலை குறையவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மீன்பிடி தடைக்காலம்
விடுமுறை நாட்களில் இறைச்சி மீன் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக மீன் சந்தையில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வருவதை காண முடியும். கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் கடந்த 14 -ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளதுடன், மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து 1 வாரம் ஆகியும் மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளது. இதை தொடர்ந்து மீன் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டாலும் கடல் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்படுகிறது. மேலும் விலையும் குறையவில்லை என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.
வஞ்சிரம் மீன் விலை ரூ.1,600
உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,600-ல் இருந்து ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சங்கரா மீன் ரூ.400, பாறை மீன் ரூ.500, விலைமீன் ரூ.500, விலைமீன் சிறியது ரூ.400, கால மீன் ரூ.1,200, மடவா மற்றும் கிளி மீன் ரூ.400, நண்டு ரூ.650, இறால் ரூ.600, இது வழக்கமான விலையைவிட சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, வழக்கமாக மீன்பிடி தடைக்காலத்தில் கடலுக்கு மீனவர்கள் செல்லமாட்டார்கள். இதனால் மீன்கள் விலை உயர்ந்து காணப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தாலும் கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனால் கேரளா மீன் வியாபாரிகள் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கு வந்து மீன்களை மொத்த வியாபாரிகளிடம் நேரடியாக ஏலத்தில் எடுத்து செல்கின்றனர். இதனால் சில்லறை மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவும், விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த மீன்கள் விலை உயர்வை பயன்படுத்தி முட்டை விலையும் உயர்ந்து வருகிறது. இது பொதுமக்களை பாதிப்படைய வைத்துள்ளது. வரும் வாரங்களில் மீன்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.