< Back
மாநில செய்திகள்
காரைக்குடி பகுதியில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள் வெளியே செல்ல பொதுமக்கள் அச்சம்
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடி பகுதியில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள் வெளியே செல்ல பொதுமக்கள் அச்சம்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

காரைக்குடி பகுதியில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலை உள்ளது.

காரைக்குடி

காரைக்குடி பகுதியில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலை உள்ளது.

பட்டப்பகலில் கொலை

காரைக்குடி நகர் வளர்ச்சியடைந்த நகரமாக இருந்து வருவதால் இந்த பகுதியை விரைவில் மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதவிர காரைக்குடி நகரை கல்வி நகரமாக மாற்றி காட்டியவர் வள்ளல் அழகப்பர். இந்த பகுதியை வருங்காலத்தில் புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் கல்விக்காக தனது சொத்தை வழங்கி தற்போது அழகப்பா பல்கலைக்கழகம், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவைகள் இயங்கி வருகிறது. இதுதவிர சட்ட கல்லூரியும் உள்ளது.

இந்த பகுதி மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் மட்டும் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வருவதால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்குடி நகரில் கொலை, பழிக்கு பழி கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது அரிதானதாகவே இருக்கின்றது.

இந்தநிலையில் சமீபத்தில் சினிமாவில் நடப்பது போன்று பட்டப்பகலில் காரைக்குடி புதிய பஸ் நிலையம் பின்புறம் பகுதியில் மதுரையை சேர்ந்த ஒரு வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு ஆஜராக வந்தபோது மர்ம கும்பலால் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி, விரட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் அச்சமடைந்துள்ளனர்.

நடவடிக்கை தேவை

இதுகுறித்து சமூக ஆர்வலரும், நகராட்சி கவுன்சிலருமான டாக்டர் பிரகாஷ் என்பவர் கூறியதாவது:-

காரைக்குடி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நகராட்சி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் வாலிபர் ஒருவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை கொண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் காரைக்குடி நகர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த கொலை சம்பவம் நடந்த இடம் அருகே காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையம் ஆகியவை உள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான கொலை சம்பவம் மற்ற மாவட்டங்களில் தான் அதிக அளவில் நடப்பது வழக்கம். தற்போது காரைக்குடி நகர் பகுதியில் சினிமாவில் வரும் காட்சி போன்று விரட்டி சென்று கொலை செய்யும் சம்பவம் நடந்துள்ளதால் காரைக்குடி நகர் கொலை நகரமாக மாறுகிறதோ என்ற அச்சம் இப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்தி இங்கு ரவுடிகள், கொலையாளிளை இரும்பு கரம் கொண்டு அடக்கி இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்