தென்காசி
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
|பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.
தென்காசி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர்.
மக்கள் குவிந்தனர்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கமாக சுமார் 400 பேர் மனுக்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனுக்கள் கொடுக்க குவிந்தனர்.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தனிநபர் கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டன.
மின் மயானம்
புளியங்குடி சிந்தாமணி பகுதி முத்துராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில்,
புளியங்குடி சிந்தாமணி பகுதியில் ஏற்கனவே மின்மயானம் ஒன்று உள்ளது. அது சரிவர இயங்காத நிலையில் இருக்கிறது. மேலும் புளியங்குடி 12-வது வார்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 2-வது மின் மயானம் அமைக்க நகராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதி நீண்ட காலமாக சுடுகாடாக உள்ளது. எனவே இங்கு வசிக்கும் பலர் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இப்போது மேலும் ஒரு சுடுகாடு உருவாக்குவதை வேறு பகுதிக்கு மாற்றி ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மிகவும் குறுகியது. எனவே இந்த இடத்தினால் பொதுமக்களுக்கு ஆரோக்கியம் கெடுவதோடு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே வேறு இடத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திராவிட தமிழர் கட்சி
திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் கொடுத்துள்ள மனுவில், "தென்காசி, ஆலங்குளம், வீரகேரளம்புதூர், திப்பணம்பட்டி, சில்லரைபுரவு, செட்டியூர் காளிநகர், பெத்தநாடார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.