கள்ளக்குறிச்சி
வீட்டில் திருட முயன்ற மர்மநபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்தனர்
|ரிஷிவந்தியம் அருகே வீட்டில் திருட முயன்ற மர்மநபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷிவந்தியம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த பாவந்தூர் தக்காவை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ராஜ்குமார்(வயது 37). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்புறம் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ராஜ்குமார் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் வீ்ட்டின் கதவை திறந்து திருட முயற்சித்துக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 2 மர்ம நபர்களையும் துரத்தி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ்(36), ஆறுமுகம் மகன் விஜய்(30) என்பதும் இருவரும் திருடுவதற்காக வீட்டின் கதவை திறக்க முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷ், விஜய் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் திருட முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.