திருவள்ளூர்
பொதுமக்கள் ஜமாபந்தியில் கோரிக்கைக்கு தீர்வு காணலாம் - கலெக்டர் பேச்சு
|ஜமாபந்தியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை தாலுகா அலுவலகத்தில் 1431-ம் ஆண்டுக்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி ஜமாபந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் நாள் கூட்டத்தில் ஆர்.கே. பேட்டை தாலுகாவை சேர்ந்த ஜி.சி.எஸ்.கண்டிகை ஏ., ஜி.சி.எஸ். கண்டிகை பி, வங்கனூர், எஸ்.வி.ஜி. புரம், வெள்ளாத்தூர், அம்மனேரி, ஆதிவராகபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.
அப்போது இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனை கோரி 197 மனுக்களை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஜமாபந்தியில் தாசில்தார் தமயந்தி மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் வெளியகரம், இருதலை வாரி பட்டடை, புதுப்பட்டு, தளவாய்பட்டடை, ஈச்சம்பாடி, பெருமாநல்லூர், குமாரராஜு பேட்டை, திருமல் ராஜு பேட்டை போன்ற கிராமங்களில் வரவு செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டன அதன்பிறகு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கிய ஜமாபந்தி இந்த மாதம் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களான பட்டா-சிட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தமான மனுக்களை வழங்கி தீர்வு காணலாம். இதில் நேற்று திருவள்ளூர் குறுவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இன்று (புதன்கிழமை) தண்ணீர் குளம், புல்லரம்பாக்கம், பூண்டி ஆகிய குறுவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும், 9-ந் தேதி பாண்டூர், 10-ந்தேதி வெள்ளியூர், 14-ந்தேதி அம்மணம்பாக்கம், 15-ந் தேதி திருவூர், 16-ந் தேதி கிளாம்பாக்கம், 17-ந்தேதி வெங்கத்தூர், 21 மற்றும் 22-ந்தேதிகளில் கடம்பத்தூர், 23 மற்றும் 24-ந்தேதிகளில் மப்பேடு ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட கிராம மக்கள் தங்களது வருவாய் துறை சம்பந்தமான கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம்.
நேற்று நடைபெற்ற ஜமாபந்தி தொடக்க விழா நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) முரளி முன்னிலை வகித்தார். இதில் தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர்.
=========