புதுக்கோட்டை
சூறையாடியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
|காரையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவு இழுத்து மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் காரையூரை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது இக்பால் தலைமையில் மனு கொடுக்க திரண்டு வந்தனர்.
மேலும் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். கோரிக்கை தொடர்பாக விசாரித்த போது காரையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரியும், ஊராட்சி மன்ற தலைவரிடம் பணம் வாங்கி மோசடி செய்தவரையும் கைது செய்ய வேண்டும் என மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.
நுழைவுவாயில் கதவு மூடப்பட்டதால்...
இதையடுத்து குறிப்பிட்ட நபர்களை மட்டும் மனு கொடுக்க செல்ல அனுமதி அளிக்கப்படும் என போலீசார் கூறினர். ஆனால் மற்றவர்களும் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயிலில் இரும்பு கதவினை இழுத்து போலீசார் மூடி அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதன்பின் கூட்டத்தை கலைத்த பின் கதவு திறக்கப்பட்டது. முக்கிய நபர்கள் மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவு திடீரென இழுத்து மூடப்பட்டதால் மனு கொடுக்க வந்த மற்ற பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
408 மனுக்கள்
கூட்டத்தில் பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 408 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ரூ.1.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.