செங்கல்பட்டு
மாமல்லபுரம் அருகே நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
|மாமல்லபுரம் அருகே பேரூரில் நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இடம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக பராமரிக்க திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட பேரூரில் 75 செண்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக நெம்மேலி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருப்போரூர் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாக் சில வாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி துறையில் உள்ள பொறியாளர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 5-க்கும் மேற்பட்டோர் நர்சரி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரூர் கிராம மக்கள் அங்கு கும்பலாக திரண்டு சென்று நர்சரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஏற்கனவே மத்திய அரசின் சுனாமி ஆராய்ச்சி மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த திட்டம் கிடப்பில் உள்ளதாகவும், இந்த இடம் மேய்க்கால் புறம்போக்கு இடம் என்றும், இங்கு நர்சரி அமைத்தால் இந்த பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகள் எங்கு மேய்ச்சலுக்கு செல்லும் என்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நர்சரி அமைக்க இந்த இடத்தை எப்படி ஒதுக்கீடு செய்யலாம் என்று அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுமையிட்டு அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
அங்கு பதற்றமான சூழல் ஏற்படவே தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அதிகாரிகளை முற்றுகையிட்ட பேரூர் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேரூர் கிராம பொதுமக்கள், இங்கு நர்சரி அமைக்க விடமாட்டோம். திருப்போரூர் ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் ஏக்கர் கணக்கில் உள்ள இடத்தில் நர்சரி அமைத்து கொள்ளுங்கள். கால்நடைகள் மேய்ச்சல் இடமாக உள்ள இங்கு நாங்கள் நர்சரி அமைக்க விடமாட்டோம். இன்னும் ஒரிரு தினங்களில் மாவட்ட கலெக்டரை சந்தித்து இதுகுறித்து மனு அளித்து முறையிட உள்ளோம். அதுவரை இங்கு நிலம் அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ள கூடாது என்றனர்.
இதையடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தும் வகையில் இங்கு தற்காலிகமாக நிலம் அளவீடு செய்யும் பணிகள் நடக்காது என்றும், அதிகாரிகளும் இந்த பணிகளில் ஈடுபடமாட்டார்கள் என்றும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். பிறகு போலீசாரின் சமாதானத்தை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.