< Back
மாநில செய்திகள்
இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலியை வெட்டிக் கொன்று எரித்த சைக்கோ வாலிபர்..
மாநில செய்திகள்

'இன்ஸ்டாகிராம்' கள்ளக்காதலியை வெட்டிக் கொன்று எரித்த 'சைக்கோ' வாலிபர்..

தினத்தந்தி
|
4 Feb 2024 6:50 AM IST

உயிரிழந்த பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி ஊராட்சி மலையாளப்பட்டி கருமரத்தான்காடு பகுதியில் வல்லரசு என்பவரின் வீட்டின் முன்னால் பெண்ணின் உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக நேற்று முன்தினம் தேக்கல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றிலும் எரிந்த நிலையில் எலும்புகூடாக இருந்த பெண்ணின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்த பெண், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சுகுணா என்பது தெரியவந்தது. இவருடைய கணவர் கண்ணன். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

10-ம் வகுப்பு வரை படித்த சுகுணா கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 3 பெண் குழந்தைகளும் சுகுணாவின் தாய், தந்தை பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் காதல்

இந்த நிலையில் சுகுணாவிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த வல்லரசு (24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. காதல் மயக்கத்தில் கடந்த 6 மாத காலமாக சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கல்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலையாளப்பட்டி கருமத்தான்காடு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கள்ளக்காதலன் வல்லரசு உடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சுகுணாவை அரிவாளால் வெட்டி கொலை செய்த வல்லரசு அவரது உடலை தீவைத்து எரித்த அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான வல்லரசுவை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

இன்ஸ்டாகிராம் சைக்கோ காதலன் வல்லரசு போலீசாரிடம் அளித்த 'பகீர்' வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த என் மீது ஒரு போக்சோ வழக்கு மற்றும் தன் உறவினரை வெட்டிய கொலை வழக்கு என 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவ்வப்போது சாமி வந்து சாமியாடும் பழக்கம் எனக்கு உண்டு. இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு சுகுணா அறிமுகம் ஆனார். அவரை காதலித்து தாலி கட்டி திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்தேன்.

கடந்த 6 மாத காலமாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். பொங்கலுக்கு சுகுணா ஊருக்கு சென்று விட்டு திரும்பியதில் இருந்து அவளிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. சுகுணா என் சொல் பேச்சை கேட்பதில்லை. எனக்கு சாமி சொல்லிச்சி. நான் சாமி கும்பிட அவள் வாங்கி வந்த முட்டை கூட கெட்டுப்போனது. சுகுணா என்னை விட்டு சென்று விடுவாளோ என பயந்தேன்.

அப்போது என்னிடம் கோபித்து கொண்டு வெளியே கிளம்பிய சுகுணாவை அரிவாளால் வெட்டி கொன்றேன். அவள் உடல் மீது கல்லை எடுத்து வைத்து விட்டு கொல்லிமலை சென்றேன். மறுநாள் எனது நண்பன் ஒருவனை உதவிக்கு அழைத்துக்கொண்டு மீண்டும் ஊருக்கு வந்தேன். நேற்று முன்தினம் சுகுணா உடலை விறகு போட்டு எரித்து விட்டேன். எதிர்பாராத விதமாக போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்தனர். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளாா்.

மேலும் சுகுணா உடலை எரிப்பதற்கு உதவி புரிந்ததாக 18 வயது சிறுவன் ஒருவனையும் கைது செய்து சிறுவர் சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்