தஞ்சாவூர்
பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் ரத்து
|கும்பகோணம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலர் ம.க. பாலதண்டாயுதம் மீது குளத்தில் இருந்து மண் எடுத்துச்சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் நேற்று ஆடுதுறை பஸ் நிலையம் அருகில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்காக நேற்று காலை திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஆடுதுறை வீரசோழன் திருமண மண்டபத்தில் குவிந்தனர். இதில் கலந்துெகாள்வதற்காக வன்னியர் சங்க மாநிலத்தலைவர் பு. தா. அருள்மொழி, மாநில செயலாளர் வைத்தி, உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ. ஆலயமணி, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், மாநில பொதுக்குழு உறுப்பினர் பானுமதி சத்யமூர்த்தி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அப்போது திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்ெபக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேரில் வந்து கவுன்சிலர் பாலதண்டாயுதம் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்வதாகவும், வழக்கு போட்டவர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.