விருதுநகர்
டெண்டர் அறிவித்துள்ள நிலையில் தாமதிக்காமல் திட்ட பணியை தொடங்க வேண்டும்
|டெண்டர் அறிவித்துள்ள நிலையில் தாமதிக்காமல் திட்ட பணியை தொடங்க வேண்டும் என எம்.பி. வலியுறுத்தினார்.
மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் 2019-ம் ஆண்டு தோப்பூரில் பிரதமரால் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அவசர, அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனாலும் 4 ஆண்டுகள் ஆகியும் திட்டப்பணிகள் தொடங்கப்படாத நிலையில் தற்போது திட்ட மதிப்பீடு 60 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனியாவது எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான திட்டப் பணியை மேலும் தாமதிக்காமல் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும். இதுவும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதோ என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே மத்திய அரசு மேலும் தாமதிக்காமல் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்ட பணியை நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.