கோயம்புத்தூர்
கிணத்துக்கடவில் முன்னேற்பாடுகள் தீவிரம்
|கனமழையை எதிர்கொள்ள கிணத்துக்கடவில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கிணத்துக்கடவு
கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் முன்னேற்பாடு நடவடிக்கையாக தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் கூறியதாவது:-
கிணத்துக்கடவு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை தயாராக உள்ளது. மழை நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் உள்ள தண்ணீரை கடக்க செல்லும்போது கையில் குச்சியுடன் செல்ல வேண்டும். அப்போதுதான் தண்ணீர் எந்த அளவு செல்கிறது என்பதை தெரிந்துகொண்டு, தண்ணீர் அதிகமாக சென்றால் உடனே தண்ணீரை விட்டு வெளியே வந்து தண்ணீர் வடிந்த பின்னர் கடக்க வேண்டும். காற்று அதிகமாக வீசும் போது மரத்தின் கீழ் நிற்கக்கூடாது. மழை நேரத்தில் மின் கம்பி கீழே அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம். உடனடியாக இதுகுறித்து மின்வாரியத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிணத்துக்கடவு தாலுகா பகுதியை பொருத்தவரையில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து தளவாட பொருட்களுடன் தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.