கன்னியாகுமரி
கோவில்களில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
|குமரி மாவட்டத்தில் விஜயதசமி விழாவையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
குமரி மாவட்டத்தில் விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்வி, விளையாட்டு, தொழில் தொடங்குவதற்கு ஏற்ற தினமாக விஜயதசமி கருதப்படுவதால் நேற்று முன்தினம் ஆயுதபூஜையின் போது பூஜையில் வைத்த தொழில் கருவிகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை விஜயதசமி நாளான நேற்று மீண்டும் பூஜை செய்து எடுத்து பயன்படுத்தினர்.
விஜயதசமி நாளில் என்ன நல்ல காாியங்கள் செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது இந்துக்களின் ஐதீகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டே பலரும் தங்கள் குழந்தைகளுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தனர். அதாவது விஜயதசமி அன்று ஒரு தட்டில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்து அதில் எழுத்துக்களை எழுத கற்றுக் கொடுப்பார்கள். ஏடு தொடங்கும் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும், வீடுகளிலும் நடைபெற்றது.
இதையொட்டி ெபற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். பின்னர் குழந்தையின் கை விரலை பிடித்து தாம்பளத்தில் வைத்திருந்த அரிசியில் அ, ஆ... எழுத வைத்தனர். மேலும் தங்க ஊசியால் குழந்தையின் நாக்கில் 'அ' எழுதப்பட்டது. வித்யாரம்பம் நிகழ்ச்சி காரணமாக அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதேபோல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கோவில் தந்திரி சங்கர நாராயண ஐயர், மேல் சாந்திகள் வினீஸ் குருக்கள், பகவதி குருக்கள், வினு குருக்கள் ஆகியோர் குழந்தைகளுக்கு பச்சரிசியில் மஞ்சளால் எழுத்து எழுத வைத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏடு எழுத தொடங்கி வைக்கப்பட்டது.
பத்மநாபபுரம் அரண்மனையில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி பேராசிரியர்கள் சங்கரநாராயண பிள்ளை, அய்யப்பன், ஆசிரியர் ரெகுராமன் ஆகியோர் குழந்தைகளின் கை விரலால் தட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் எழுதி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
திருவட்டார் ஆஞ்சநேயசாமி கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆஞ்சநேய சித்தர் குழந்தைகளுக்கு அரிசியில் எழுத வைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கேரளாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு அரிசியில் எழுத வைத்து ஏடு தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக நேற்று முன்தினம் ஆயுதபூஜை விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோ நிறுத்தங்கள் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்தன. மேலும், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு, கோட்டார், வடிவீஸ்வரம் ஆகிய இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடந்தது. வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற இன்னிசை கச்சேரியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கச்சேரியை கண்டு மகிழ்ந்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கச்சேரி பார்த்ததால் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை போலீசார் சீரமைத்தனர்.