< Back
மாநில செய்திகள்
அதிகாரியின் சட்டையை பிடித்து எட்டி உதைத்த கைதி
திருச்சி
மாநில செய்திகள்

அதிகாரியின் சட்டையை பிடித்து எட்டி உதைத்த கைதி

தினத்தந்தி
|
12 Dec 2022 2:22 AM IST

அதிகாரியின் சட்டையை பிடித்து கைதி எட்டி உதைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள முனியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 37). ஒரு கொலை வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் மன்னார்குடி கோர்ட்டில் சரணடைந்த இவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து செல்வகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தனது ஆடைகளை இஸ்திரி செய்து தரும்படி கூறி சிறையில் செல்வகுமார் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சிறை அதிகாரி கண்ணன், செல்வகுமாரை மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு அறைக்கு அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது, செல்வகுமாரிடம் ஏன் இப்படி தகராறு செய்கிறாய்? என்று சிறை அதிகாரி கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் சிறை அதிகாரி கண்ணனின் சட்டையை பிடித்து இழுத்து, அவரை எட்டி உதைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி சிறை அதிகாரி கண்ணன் திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்