< Back
மாநில செய்திகள்
எலுமிச்சம் பழம் அந்தரத்தில் பறப்பதாக கூறி தம்பதியை ஏமாற்றிய பூசாரிகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

எலுமிச்சம் பழம் அந்தரத்தில் பறப்பதாக கூறி தம்பதியை ஏமாற்றிய பூசாரிகள்

தினத்தந்தி
|
21 May 2022 6:36 PM GMT

விராலிமலை அருகே தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த பூசாரிகள் எலுமிச்சம் பழம் அந்தரத்தில் பறப்பதாக கூறி தம்பதியை ஏமாற்றியது அம்பலமானது.

ஆவூர்,

தங்க புதையல்

விராலிமலை ஒன்றியம், மண்டையூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 58). இவருடைய மனைவி முத்துலட்சுமி (50). இவர்களது வீட்டில் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.80 ஆயிரம் மோசடி செய்ததாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த குறி சொல்லும் பூசாரிகள் மணி (48), முருகேசன் (50) மருதுபட்டி ராசு (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் மோசடி பூசாரிகளிடம் முத்துலட்சுமி தம்பதிகள் எவ்வாறு ஏமாந்தனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது. அதன்விவரம் வருமாறு:-

அந்தரத்தில் பறந்த எலுமிச்சம் பழம்

கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மண்டையூரில் உள்ள முத்துலட்சுமி வீட்டிற்கு வந்த மோசடி பூசாரிகள் முதலில் வீட்டின் உள்ளே உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று பார்த்துள்ளனர். அப்போது முத்துலட்சுமி தம்பதியை பார்த்து உங்கள் வீட்டில் எந்த இடத்தில் தங்க புதையல் உள்ளது என்பதை கண்டறிய நாங்கள் தனியாக பூஜை செய்ய வேண்டும். அதனால் நீங்கள் இதுகுறித்து யாரிடமும் வெளியே சொல்லாமல் அமைதியாக வெளியில் அமருங்கள் என்று கூறிவிட்டு வீட்டின் முன்வாசல் கதவை உள்புறமாக பூட்டி கொண்டு ஒரு அறையின் உள்ளே 3 பூசாரிகளும் பூஜை செய்துள்ளனர்.

அப்போது பூசாரியான மணி தரையில் அமர்ந்தவாறு எலுமிச்சம் பழத்தை கீழே உருட்டி விட்டும் அந்தரத்தில் பறக்க விட்டும் வித்தை காட்டி உள்ளார். அதை மற்றொரு பூசாரியான முருகேசன் தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். சிறிது நேரத்தில் வெளியே வந்த பூசாரிகள் உங்கள் வீட்டிற்குள் தங்க புதையல் இருக்கும் இடத்தை நாங்கள் பார்த்துவிட்டோம்.

பித்தளை சிலைகள்

இதோ அந்த இடத்தில் எலுமிச்சம்பழம் அந்தரத்தில் பறந்தது. அதனை நாங்கள் வீடியோ எடுத்து வைத்துள்ளோம் அதை பாருங்கள் என்று முத்துலட்சுமி தம்பதியிடம் பூசாரிகள் காட்டியுள்ளனர். அதை பார்த்த தம்பதிகள் தங்கள் வீட்டில் உண்மையாகவே தங்கப்புதையல் இருக்கிறது என்று நம்பி பூசாரிகளிடம் முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் 15 நாள் கழித்து மண்டையூருக்கு வந்த பூசாரிகள் 3 பேரும் அவர்கள் பூஜை செய்த இடத்தில் குழிதோண்டி அதில் ஐம்பொன் சிலைகள் இருந்ததாக தாங்கள் கொண்டு வந்திருந்த பித்தளை சிலைகளை முத்துலட்சுமி தம்பதியிடம் கொடுத்துவிட்டு ரூ.30 ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர்களிடம் பூசாரிகள் எலுமிச்சம் பழத்தை அந்தரத்தில் பறக்க விட்டு நம்ப வைத்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்