திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலுக்கு 108 தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்த அர்ச்சகர்கள்
|கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு 108 தீர்த்த குடங்களை அர்ச்சகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கும்பாபிஷேகம்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு வருகிற வெள்ளிக்கிழமை (27-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 25-ந்தேதி பழனி கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதையடுத்து வர்ணம் பூசும் பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்தல் என அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. அன்றைய தினம் ராஜகோபுரம் மற்றும் அனைத்து உப சன்னதி கோபுரங்களிலும் கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு யாகம், பேரொளி வழிபாடு, திருவமுது படைத்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் பழனி திருஆவினன்குடியில் கஜ பூஜை, ஆநிரை பூஜை, பரிபூஜை, கோவில் மிராஸ் பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
108 தீர்த்தக்குடங்கள் ஊர்வலம்
இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் பழனி முருகன் கோவிலில் திருமுருக யாகம், 6 வகை பொருட்களால் சிறப்பு யாகம், ஆதிசைவ மறையோர் வழிபாடு, திருவொளி வழிபாடு, கந்தபுராணம், திருமுறை, திருப்புகழ் பாடி விண்ணப்பம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 10 மணிக்கு அர்ச்சக ஸ்தானீகர்கள் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து 108 குடங்களில் சண்முக நதி தீர்த்தம் எடுத்து பழனி கோவிலுக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் தீர்த்தக்குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து மேள, தாளம் முழங்க அர்ச்சகர்கள் தீர்த்தக்குடங்களை தலையில் வைத்து சுமந்தபடி புறப்பட்டனர். அவர்கள் கிழக்கு ரதவீதி, பெரியகடைவீதி, மயில் ரவுண்டானா, அடிவாரம் வழியாக மலைக்கோவிலுக்கு வந்தனர். மாலை 6 மணிக்கு அரசமர வழிபாடு, நிலமகள் வழிபாடு, பூமிபூஜை, புனிதமண் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து திருவாசகம் பாடப்பட்டது. அதன்பின்பு ஏழு கடல் வழிபாடு, நெல்மணி, நிறைகுட வழிபாடு, மண் எடுக்கும் கருவி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
யாக பூஜை
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இதை முன்னிட்டு காலையில் பாதவிநாயகர் முதல் அனைத்து உப தெய்வங்களுக்கும் கலசம் அலங்கரிக்கப்பட்டு சக்தி கொணர்தல் நடைபெறுகிறது. பின்னர் மேளதாளத்துடன் கலசங்கள் உலா வந்து யாகசாலைக்கு கொண்டு வரப்படுகிறது.
தொடர்ந்து சூரிய கதிரில் இருந்து யாகத்துக்கு நெருப்பு எடுத்தல், யாகத்துக்கு தீ இடுதல் நிகழ்ச்சி, பின்பு தீபாராதனை காட்டப்படுகிறது.
இதையடுத்து முதற்கால யாக பூஜை தொடங்குகிறது. பின்னர் சிறப்பு பூஜை, விதை, தண்டு, இலை, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுவகை சோறு, பால், தயிர், சுண்டல் மற்றும் 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு யாக பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.